Dienstag, 5. Mai 2026

தமிழக தேர்தலும் தமிழ்மக்கள் அரசியலும் – சினிமா, ஆண்மைவாதம் மற்றும் ஜனநாயகத்தின் சோதனை - கணபதிப்பிள்ளை சுதாகரன் -05.05.2026


2026 மே 4ஆம் தேதி வெளியான தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரங்களை மட்டுமல்ல, பொதுமக்களையும் அதிர்ச்சியடையச் செய்தன. கருத்துக்கணிப்புகளை முற்றிலும் தவறாக்கி, வெறும் இரண்டு ஆண்டுகளில் உருவான ஒரு புதிய அரசியல் சக்தி 109 இடங்களை கைப்பற்றியது. நீண்ட காலமாக மாறி மாறி ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிய இந்த முடிவு, தமிழகத்தின் அரசியல் மனநிலையைப் பற்றிய ஒரு ஆழமான எடுத்துகாட்டாகும்.

ஜனநாயகம்: மக்கள் தீர்மானம் – அதன் பலமும் அபாயமும்

ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி தீர்மான சக்தி. வரலாற்றைப் பார்த்தால், மக்கள் சமூகப் பொறுப்பு உணர்வு கொண்ட, பொதுநலத்தை முன்னிறுத்தும் தலைவர்களையும் தெரிவு செய்துள்ளனர். அதே சமயம், எளிய வாக்குறுதிகளால் கவரப்படும் Populist அரசியல்வாதிகளையும், சில நேரங்களில் அதிகாரமயமான Dictator தன்மையுள்ள ஆட்சியாளர்களையும் கூட ஜனநாயக முறையிலேயே தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதன் மூலம் வெளிப்படும் உண்மை என்னவென்றால், ஜனநாயகம் தானாகவே நல்ல முடிவுகளை உருவாக்காது; அது மக்களின் அரசியல் விழிப்புணர்வின் தரத்தை பிரதிபலிக்கிறது. எனவே முக்கியமான கேள்வி, யாரை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதல்ல — அவர்கள் எந்த அடிப்படையில் அந்தத் தேர்வை செய்கிறார்கள் என்பதே.

தமிழக அரசியல் மற்றும் சினிமா தாக்கம்

தமிழகத்தில் அரசியல் மற்றும் சினிமா இடையிலான தொடர்பு புதிதல்ல. M. G. Ramachandran, Rajinikanth, Vijayakanth போன்ற நடிகர்கள் அரசியலுக்குள் வந்த காலத்திலிருந்தே “நடிகர் → தலைவர்” என்ற மாற்றம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்தப் பின்னணியில் Vijay போன்ற நடிகரின் அரசியல் எழுச்சியும் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் இப்போது ஏற்பட்டிருப்பது வேகத்திலும் தாக்கத்திலும் புதிய அளவை எட்டியுள்ளது.

சினிமா, Macho ஆண்மைவாதம் மற்றும் அதன் பரவல்

விஜய் நடித்த பல திரைப்படங்களில் ஒரு பொதுவான காட்சி அமைப்பு உள்ளது. அந்தக் கதைகளில் ஒரு தனிநபர் ஹீரோ எல்லா பிரச்சினைகளையும் தனியாக தீர்க்கும் சக்தியாக காட்டப்படுகிறார். உடல் வலிமை, ஆதிக்கம், எதிரிகளை அடக்குதல் போன்ற அம்சங்கள் வலுப்படுத்தப்படுகின்றன. இதனால் ஒரு வகையான macho ஆண்மைவாத காட்சிப்படுத்தல் உருவாகிறது.

இந்த நடைமுறை விஜயுடன் மட்டும் தொடங்கியதல்ல; தமிழ் commercial சினிமாவின் நீண்டகால கலாச்சாரம். ஆனால் இப்போது அந்த “Hero image” அரசியல் நம்பிக்கையாக மாறியுள்ளது. சினிமாவில் உருவான “ஒருவன் வந்தால் எல்லாம் சரியாகும்” என்ற கற்பனை, அரசியலிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், இந்த macho Hero கலாச்சாரத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா மற்றும் பிற புலம்பெயர் நாடுகளிலும் பரவியுள்ளது. குறிப்பாக இரண்டாம் தலைமுறை தமிழர்களிடையே, இந்த சினிமா உருவாக்கும் Hero அடையாளம் அவர்களின் அரசியல் மற்றும் சமூக பார்வைகளையும் பாதிக்கிறது. இதனால் உண்மையான சமூக சிக்கல்களின் சிக்கலான தன்மை எளிமைப்படுத்தப்பட்டு, “ஒரு வலுவான நபர் எல்லாவற்றையும் தீர்க்க முடியும்” என்ற மனநிலை பரவுகிறது.

ரசிகர் கலாச்சாரம் அரசியலாக மாறும் போது

தமிழகத்தில் நடிகர்களை “தலைவர்” என்று அழைக்கும் மனநிலை, திரைப்பட வெளியீட்டின்போது கொண்டாடப்படும் வழிபாட்டு கலாச்சாரம், ரசிகர் மன்றங்கள் போன்றவை அனைத்தும் சேர்ந்து ஒரு உணர்ச்சி சார்ந்த அரசியல் அடையாளத்தை உருவாக்குகின்றன. இந்த தேர்தலில் மக்கள் வேட்பாளர்களின் திறமையையோ அல்லது கட்சிக் கொள்கைகளையோ அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்கவில்லை; ஒரே நபரை மையமாகக் கொண்டு தீர்மானித்தனர். இது ஜனநாயகத்தின் ஒரு பலவீனமான வெளிப்பாடாக பார்க்கப்பட வேண்டும்.

மாற்ற அரசியலா? அல்லது தவறான ஒப்பீடா?

சிலர் தமிழகத்தில் ஏற்பட்ட இந்த தேர்தல் முடிவுகளை “மாற்ற அரசியல்” என வர்ணித்து, இலங்கையில் ஆட்சியைப் பெற்ற National People's Power (NPP) உடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் இந்த ஒப்பீடு அடிப்படையில் தவறானது.

இலங்கையில் National People's Power உருவாகியது திடீர் அரசியல் அலைவாக அல்ல. அதன் மூலக்கட்சியான Janatha Vimukthi Peramuna (JVP) பல தசாப்தங்களாக அடிப்படை கிராமங்களில் இருந்து வளர்ந்த இயக்கமாகும். சமூக அநீதி, பொருளாதார சிக்கல்கள், அரசியல் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக நீண்டகால போராட்டங்கள் மற்றும் அமைப்பு ரீதியான பணிகள் மூலம் அது வேரூன்றியது.

இலங்கையில் மக்கள் அந்த அரசியல் மாற்றத்தைத் தேர்ந்தெடுத்தது, ஒரு நபரின் கவர்ச்சிக்காக அல்ல; மாறி மாறி ஆட்சி செய்த இனவாத, ஊழல் நிறைந்த ஆட்சிகளுக்கு எதிரான திட்டமிட்ட அரசியல் பதிலாக. அது ஒரு ரசிகர் அலை அல்ல — ஒரு சமூக அரசியல் எழுச்சி.

இதற்கு மாறாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், பெரும்பாலும் ரசிகர் ஆதரவு, சினிமா கவர்ச்சி மற்றும் தனிநபர் மைய அரசியல் மீது தங்கியுள்ளது. எனவே இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒரே கோட்டில் வைத்து பார்க்குவது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்.

திராவிட அரசியல்: சாதனைகளும் குறைபாடுகளும்


திராவிட அரசியல் தமிழகத்தில் சமூக நீதி, கல்வி வளர்ச்சி, சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முன்னேற்றம் போன்ற பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகார மையப்படுத்தல் மற்றும் சாதி அடிப்படையிலான அரசியல் நடைமுறைகள் போன்ற குறைபாடுகளும் உருவாகியுள்ளன. இந்த இடைவெளியே புதிய அரசியல் சக்திகளுக்கு வாய்ப்பாக மாறியுள்ளது.

Macho கலாச்சாரம் அரசியலை எவ்வாறு வடிவமைக்கிறது?

சினிமாவில் உருவான macho ஹீரோ, அரசியலில் “மீட்பவர் தலைவர்” ஆக மாறும்போது, மக்கள் கூட்டுத் தீர்வுகளை விட தனிநபர் தீர்வுகளில் நம்பிக்கை வைக்கத் தொடங்குகிறார்கள். ஜனநாயக அமைப்புகளை விட ஒரு வலுவான நபரின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது. இதன் மூலம் சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய பதில்களை எதிர்பார்க்கும் மனநிலை உருவாகிறது.

எதிர்கால சோதனை: கூட்டணி அரசியல் மற்றும் தலைமை

இந்த தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் பரிசோதனை தொடங்கியுள்ளதைக் காட்டுகின்றன. ஆனால் அதன் உண்மையான சோதனை இன்னும் முன்னிலையில் உள்ளது. தொங்கு சட்டமன்றம் உருவாகும் சூழ்நிலையில், கூட்டணி அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும். அந்த நேரத்தில் யாருடன் கூட்டணி அமைக்கப்படுகிறது, எந்த கொள்கைகளின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்படுகிறது என்பதன் மூலம் இந்த புதிய அரசியல் சக்தியின் உண்மையான திசை வெளிப்படும்.

மேடைப் பேச்சுகளைத் தாண்டி, மக்களிடம் இறங்கி நேரடியாக வேலை செய்வது தான் ஒரு தலைவரின் உண்மையான அளவுகோல். பொதுமக்களிடமிருந்து விலகி, குளிரூட்டப்பட்ட சூழல்களில் மட்டுமே செயல்படுவது, சிக்கலான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்ப்பது போன்ற நடைமுறைகள் நீண்ட காலத்தில் தலைமை நம்பிக்கையை பாதிக்கும். தொடர்ந்து மௌனம் காக்கும் அணுகுமுறை ஒரு தந்திரமாக இருக்கலாம்; ஆனால் அது நிலையான தலைமைக்கான அடையாளமாக கருதப்பட முடியாது.

மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். அந்த மாற்றம் களத்தில் செயல்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். பொறுப்புடன் செயல்படும் ஆட்சி மட்டுமே அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும்.

தமிழ்மக்கள் அரசியல் விழிப்புணர்வு – அவசியமான கட்டம்

தமிழகத்தின் எதிர்கால அரசியல் தரத்தை உயர்த்த, சினிமாவையும் அரசியலையும் தெளிவாகப் பிரித்து பார்க்கும் மனநிலை அவசியமாகிறது. தனிநபர் வழிபாட்டை குறைத்து, கொள்கை அடிப்படையிலான அரசியல் சிந்தனையை வளர்த்தல் முக்கியம். இளைஞர்களுக்கு அரசியல் கல்வி மற்றும் வரலாற்று விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் பழைய கட்சிகளும் தங்களின் உள்மாற்றத்தை ஏற்படுத்தி புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும்.

இந்த தேர்தல் ஒரு எச்சரிக்கை மட்டுமல்ல, ஒரு வாய்ப்பும் கூட. மக்கள் மாற்றம் விரும்புகிறார்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த முடிவை ஆழமாகப் பார்த்தால், இது ஒரு அடிப்படை அரசியல் மாற்றத்தின் வெளிப்பாடு அல்ல.

இது மாற்றமோ மாற்று அரசியலோ அல்ல.
இது மக்கள் தாம் விரும்பும் நடிகரைத் தேர்வு செய்த ஒரு அரசியல் நிகழ்வு.

சினிமா உருவாக்கிய கவர்ச்சி, ரசிகர் அடையாளம், உணர்ச்சி சார்ந்த இணைப்பு ஆகியவை வாக்காக மாறியுள்ளன. கொள்கை, அமைப்பு, அனுபவம் போன்றவை இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சினிமா உருவாக்கும் Macho Hero அரசியலில் “மீட்பவர் தலைவர்” ஆக மாறும் போது, ஜனநாயகம் சோதனைக்கு உட்படுகிறது. அந்த சோதனையின் முடிவு உடனடியாக தெரியாது; ஆனால் அதன் விளைவுகள் காலப்போக்கில் வெளிப்படும்.

மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தேர்வு செய்தது அரசியலா,
அல்லது ஒரு நடிகரா —
அதுவே இந்த தேர்தலின் முக்கியமான கேள்வி.